பந்தலூர், செப்.13: பந்தலூர் அருகே அம்மன்காவு பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அம்மன்காவு பகுதியில் கிராமங்கள் குறைந்த மின் அழுத்தத்தால் மிகவும் பாதிக்கபட்டனர். இதனால் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் அம்மங்காவு பகுதி கவுன்சிலர் சுப்பிரமணி ஆகியோர் மின்சார வாரியத்துக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் மின்சார வாரியம் மூலம் தனியாக புதிய மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது.
பணிகள் நிறைவடைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மின்சார வாரிய செயற்பொறியாளர் உதகை (பொது) சிவக்குமார் தலைமையில் கூடலூர் பந்தலூர் செயற்பொறியாளர் (பொறுப்பு) முத்துகுமார், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், அம்மன்காவு வார்டு உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர் மின்மாற்றியை இயக்கி வைத்தனர். நீண்ட காலமாக குறைந்த மின்னழுத்த குறைபாட்டில் பாதிக்கபட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சியில் உப்பட்டி உதவி மின் பொறியாளர் கார்த்திக், அய்யங்கொல்லி தமிழரசன், பந்தலூர் தர்வேஷ் மற்றும் பந்தலூர் அம்மன்காவு பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.