காவேரிப்பட்டணம், ஆக.30: காவேரிப்பட்டணம் சார்பதிவாளர் ஆபீசில் ₹1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து பத்திர பதிவு செய்தவர்கள் குறித்து விஜிலென்ஸ் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பத்திர பதிவுக்கு லஞ்சம் வாங்குவதாக, கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையில், எஸ்ஐ விஜயகுமார், ஏட்டுகள் மஞ்சுநாதன், மணிவண்ணன், போலீசார் தர், ரவி தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் சார்பதிவாளர் அலுவலகத்தில், திடீரென புகுந்து அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத ₹1 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக, நேற்று முன்தினம் இரவு 8.30 மணி வரை, சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், கைப்பற்றப்பட்ட ₹1 லட்சம் பணத்தை எடுத்து சென்றனர்.
தொடர்ந்து அன்றைய தினம், சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திர பதிவு செய்ய வந்தவர்கள் யார், அவர்கள் மூலம் எவ்வளவு பண பரிமாற்றம் நடைபெற்றது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.