சூளகிரி, மே 25:சூளகிரி தாலுகா, உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திர பதிவுக்காக நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகம் எதிரே, பத்திரங்கள் எழுதும், தனியாரின் எழுத்தர் அலுவலகங்கள் ஏராளமாக உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் ஒரு பத்திர எழுத்தர் அலுவலகத்திற்கு கார் ஒன்று வந்து நின்றது. அப்போது, காரின் அடியில் இருந்து 5 அடி நீளம் கொண்ட பாம்பு வெளியே வந்தது.
அது வேகமாக ஊர்ந்தபடி, அங்கிருந்து அலுவலகத்தின் மாடிக்கு சென்றது. அங்கு 2 எழுத்தர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அவர்கள் பாம்பை கண்டதும் அலறியடித்த படி வெளியேறினர். பின்பு அங்கிருந்த பாம்பு வெளியே வந்ததால், அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் பார்த்து, அது சாரைபாம்பு என கண்டறிந்து, அதை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.