நெல்லை, மே 28: நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம், தெற்கு கருங்குளம் அரசு பள்ளியில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி சுஜி 471 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலாவதாக வந்துள்ளார். இவரது தாயார் விஜயலெட்சுமி தெற்கு கருங்குளம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். 100 சதவீத தேர்ச்சியை பெற்று இப்பள்ளி பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இப்பள்ளியில் தேர்வு எழுதிய 16 மாணவர்களில் 7 மாணவர்கள் 400க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவியை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் செ.பாலன், மாணவி சுஜிக்கு பொன்னாடை மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தார். நிகழ்வின்போது பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் முத்துகிருஷ்ணன், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர் அமைப்பினரும் உடனிருந்து பாராட்டினர்.