சென்னை, ஜூன் 6: பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள நிலையில், மண்டல அளவிலான நகர விற்பனைக் குழுவுக்கான தேர்தல் வரும் 26ம்தேதி நடக்கிறது என்று அறிவித்துள்ளது. மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற கணக்கெடுப்பின் படி, பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகள் குறித்த பெயர் பட்டியலை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் விற்பனை ஒழுங்குமுறைப்படுத்துதல் 2015 விதிகளின் படி, சென்னை மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையர் தலைமையில், ஒவ்வொரு மண்டலத்திற்கும் 14 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நகர விற்பனைக்குழு அமைக்கப்பட உள்ளது.
இக்குழுவில் சாலையோர வியாபாரிகளிலிருந்து 6 உறுப்பினர்களை தேர்தல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி, வரும் 16ம்தேதி அன்று முதல் 18ம்தேதி வரை அந்தந்த மண்டலங்களில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் வேட்புமனு படிவம் இலவசமாக வழங்கப்படும். வரும் 18ம்தேதி அன்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டு தொடர்ந்து தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் 26ம்தேதி அன்று வாக்குப்பதிவும், வரும் 27ம்தேதி அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான சாலையோர வியாபாரிகளின் பெயர் முகவரி அடங்கிய வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் ஆணையரால் நியமனம் செய்யப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வரும் 4ம்தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ரிப்பன் கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள வருவாய்த்துறை அலுவலகத்திலும், மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.