திருவண்ணாமலை, ஆக.29: பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களில் பணத்தை சேமிப்பது ஆபத்தானது என எஸ்பி அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களுக்கு எஸ்பி பிரபாகர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், வாரந்தோறும் புதன்கிழமையன்று சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. போலீஸ் ஸ்டேஷன்களில் தங்கள் புகார் மனுக்களுக்கு தீர்வு கிடைக்காத பொதுமக்கள், இக்கூட்டத்தில் மனு அளித்து பயன்பெறுகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், சிறப்பு குறைதீர்வு கூட்டம் நேற்று எஸ்பி பிரபாகர் தலைமையில் நடந்தது. அதில், கூடுதல் எஸ்பிக்கள் பழனி, சிவனுபாண்டியன், சவுந்திரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேற்று நடந்த கூட்டத்தில் 43 புகார் மனுக்கள் பெறப்பட்டன.
வழக்கம்போல அதில் பெரும்பாலானாவை குடும்ப பிரச்னை மற்றும் பாகப்பிரிவினை, சொத்து தகராறு குறித்த மனுக்களாக இருந்தன. தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த 2 பேர், தீபாவளி சீட்டு திட்டத்தில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்ததாக மனு அளித்தனர். மேலும், போளூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், ₹5 லட்சம் கடன் பெற்ற நபர், திருப்பித் தராமல் அலைக்கழிப்பதாக மனு அளித்தார். கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், தன்னுடைய நிலத்துக்கு வேறு ஒருவர் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக மனு அளித்தார். மனுக்களை பெற்றுக்கொண்ட எஸ்பி பிரபாகர், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு மனுக்களை அனுப்பி விசாரிப்பதாக தெரிவித்தார். மேலும், சேமிப்பு சீட்டு மோசடி தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், பதிவு செய்யப்படாத நிறுவனங்களில் பணத்தை சேமிப்பது ஆபத்தில் முடியும் என அறிவுறுத்தினார். அதோடு, நில பாகப்பிரிவினை, பட்டா மாற்றம், சொத்து தகராறு போன்றவற்றுக்கு வருவாய்த்துறை அல்லது நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டும் என எஸ்பி தெரிவித்தார்.