மோகனூர், ஆக.26: மாவட்ட வருவாய் அலுவலர், செயலாட்சியர் மல்லிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மோகனூரில் அமைந்துள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2024-25ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு 2400 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு 1,00,000 டன்கள் மதிப்பீட்டில் நவம்பர்-24 இரண்டாம் வாரத்தில், அரவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 2023-24ம் ஆண்டிற்கான அரவைப்பருவத்தில், கரும்பு சப்ளை செய்த விவசாயிகள் அனைவருக்கும் கரும்புக்கான கிரையத்தொகை, தமிழக அரசின் ஊக்கத்தொகை நிலுவை ஏதும் இல்லாமல் வழங்கப்பட்டுவிட்டது. பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யாத கரும்பினை, ஆலையின் விதிகளுக்கு புறம்பாக எடுத்துச் செல்ல சில இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இது சட்டப்படி குற்றமாகும். இதனால் ஆலைக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதுடன் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பு, பதிவு செய்யாத கரும்பினை முறைகேடான வகையில் வெளிச்சந்தையிலோ அல்லது வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கோ விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆலை நிர்வாகத்திற்கும் புகார்கள் வரும் பட்சத்தில், முறைகேடுகளில் ஈடுபடும் இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் மீது கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் 1966 3(ஐஎப்)ன் கீழ் மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் 1955-இசிஎ-3 கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ஆலையின் விவகார பகுதிகளுக்குட்பட்ட பதிவு செய்யாத கரும்பில் எதிர்பாராத நேர்வுகளான, தீ விபத்து, நோய் மற்றும் பூச்சி தாக்குதல், போன்ற இனங்களுக்கு மட்டுமே ஆலையாரின் நிர்வாக அனுமதி மற்றும் தடையில்லா சான்று பெற்று, பாதிக்கப்பட்ட கரும்பினை மட்டும் அப்புறப்படுத்திக் கொள்ளலாம்.
அதன் பிறகே தங்களது கரும்பை வாகனங்களில் ஏற்றி செல்ல வேண்டும். அவ்வாறு உரிய ஆவணங்கள் இன்றி, கரும்பு ஏற்றி செல்லும் வாகனங்களை காவல்துறை, போக்குவரத்துறை மூலம் பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், விவசாய அங்கத்தினர்கள் தங்களின் பதிவில்லா கரும்பினை, உடனடியாக பதிவு செய்து 2024-25ம் ஆண்டு, கரும்பின் குறைந்தபட்ச ஆதார விலையான ₹3151 டன் மற்றும் தமிழக அரசின் கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை பெற்று கொள்ளவும். இதர கோரிக்கைகளை 9489900208 என்ற அலைபேசி எண்ணிலும், கோட்ட கரும்பு அலுவலகங்களை தொடர்பு கொண்டு, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தெரியப்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.