வேலூர், பிப்.19: வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளியை சேர்ந்தவர் பிஜூசாமுவேல். இவர் ஒரு தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு ஒன்றை வாங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதி நள்ளிரவில் இவரது வங்கி கணக்கை மர்மநபர்கள் ஹேக் செய்து கிரெடிட் கார்டு மூலம் பயன்படுத்தி ₹1 லட்சத்து 99 ஆயிரத்து 996க்கு சில பொருட்களை வாங்கியுள்ளனர். மறுநாள் காலையில் பிஜூசாமுவேல் எழுந்து பார்த்தபோது தனது கிரெடிட் கார்டை மர்மநபர்கள் தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து அவர் சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் தெரிவித்தார்.
ஆனால் வங்கி தரப்பினர் நீங்கள் தான் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கி உள்ளீர்கள் என்றும் எங்கள் வங்கி மிகவும் பாதுகாப்பானது என்றும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர் வேலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. தொடர்ந்து நுகர்வோர் கோர்ட்டு நீதிபதியும், தலைவருமான மீனாட்சிசுந்தரம் உறுப்பினர்கள் அஸ்கர்கான், அசினா ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், ரிசர்வ் வங்கி விதிகளின்படி சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம், புகார் வரப்பெற்றவுடன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். புகார்தாரரும் உடனடியாக தனது புகாரை பதிவு செய்துள்ளார். அதன் மீது வங்கியினர் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் நிர்வாகத்தினர் கோர்ட்டிலும் ஆஜராகவில்லை என்பதால் பாதிக்கப்பட்ட பிஜூசாமுவேலுக்கு அவர் இழந்த பணத்தையும், வழக்கு இழப்பீடு தொகையாக ₹50 ஆயிரம், வழக்கு செலவின தொகையாக ₹25 ஆயிரம் என்று ₹2.75லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.