பண்ருட்டி, ஜூன் 6: பண்ருட்டியில் கும்பகோணம் நோக்கி சென்ற சரக்கு லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி சிஎன்ஜி கேஸ் நிரப்பப்பட்ட சரக்கு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கும்பகோணத்தை சேர்ந்த ராதா (45) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று மதியம் 1.30 மணி அளவில் பண்ருட்டி- கும்பகோணம் சாலை பணிக்கன்குப்பம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரியில் திடீரென்று தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவி வேகமாக கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்னீரை பீய்ச்சியடித்து தீ மேலும் பரவாமல் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் லாரி முழுவதும் எரிந்து சாம்பலானது.
லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாயின. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதித்தது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.