பண்ருட்டி, நவ. 19: பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வினோத், இன்ஜினியர். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி, பண்ருட்டியில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், ஜெயந்தி முத்தாண்டிக்குப்பம் பகுதியில் உள்ள இவரது மாமனார், மாமியாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ஜெயந்திக்கும், இவரது மாமனார், மாமியாருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை காரணமாக தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜெயந்தி அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.
இதனையடுத்து கடந்த 14ம் தேதி சென்னையில் இருந்து பண்ருட்டி முத்தாண்டிக்குப்பத்திற்கு வந்த தனது கணவரை பார்க்க மாமியார் வீட்டுக்கு சென்ற ஜெயந்தியை அசிங்கமாக திட்டி துப்பட்டாவால் மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், இதனால் கழுத்தில் ஏற்பட்ட வீக்கத்திற்கு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயந்தி கொடுத்த புகாரின்பேரில், மாமனார், மாமியார், இவர்களது மகள் ஆகியோர் மீது முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.