பண்ருட்டி ஆக. 7: வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ2.50 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி அடுத்த சூரக்குப்பத்தை சேர்ந்தவர் முத்துராமன் மனைவி ரேவதி(80). இவரது கணவர் சில மாதங்களுக்கு முன் இறந்தநிலையில், ரேவதி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த மாதம் ரேவதி சென்னையில் உள்ள தனது மூத்த மகள் ஹேமலதா(56) வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். இந்நிலையில் ரேவதி வீட்டில் யாருமில்லாததை அறிந்த மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 2 பவுன் வளையல், 1 பவுன் செயின், 1 பவுன் மோதிரம் என மொத்தம் 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் மற்றும் பித்தளை பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
நேற்று காலை ரேவதி வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஹேமலதாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தொலைபேசி மூலம் ஹேமலதா பண்ருட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. யாரையும் பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். திருடு போன நகைகள், பணம், பொருட்களின் மதிப்பு ரூ.2.50 லட்சம் இருக்கும். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.