பண்ருட்டி, நவ. 5: காணாமல் போன குளத்தை கண்டுபிடித்து, அதில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அண்ணா கிராமம் ஒன்றியம் பனப்பாக்கம் ஊராட்சி எம்ஜிஆர் நகரில் இருந்த பொது குளத்தை தனிநபர்கள் சிலர் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து, சமன்படுத்தி விவசாயம் செய்து வந்தனர். இதனால் குளம் இருந்த இடம் தெரியாமல் போனது. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதியினர் தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீரா கோமதி ஆகியோர், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசாருடன் நேற்று பனப்பாக்கம் ஊராட்சிக்கு சென்று, எம்ஜிஆர் நகரில் ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு மேல் ஆக்கிரமிப்பில் இருந்த குளத்தை மீட்டனர். தொடர்ந்து ஊராட்சிக்கு சொந்தமான குளத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை போர்டு வைத்தனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த குளத்தை மீட்டதால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.