திருவள்ளூர், நவ. 9: உணவு பாதுகாப்பு ஆணையர், மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் ஆணையர் அறிவுறுத்தலின் பேரிலும், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின்பேரிலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு பலகாரங்கள் மற்றும் காரவகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு திருவள்ளூரில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். திருவள்ளூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தெரிவித்ததாவது: தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரவகைள் மற்றும் கேக் போன்ற உணவுப் பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், சொந்த பந்தங்களுக்கு இதனை அன்பளிபாக அளித்து மகிழ்வதும் நமது கலாச்சாரமாக விளங்கி வருகிறது. தீபாவளி பண்டிகை காரணமாக இனிப்பு மற்றும் காரவகைகளை தயாரித்து விற்பனை செய்யும் அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொது மக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் இனிப்பு காரவகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்போருட்களைக் கொண்டு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தரமான முறையில் கலப்படமில்லாது தயாரித்து பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. மேலும் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுபடியும் பயன்படுத்தி இனிப்பு மற்றும் காரவகைகளை தயாரிக்க கூடாது. இதனை ஆர்.யு.சி.ஓ. திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் வழங்கவேண்டும்.
பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபரச்சீட்டு இடும்போது, அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்), சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியனவற்றை அவசியம் குறிப்பிடவேண்டும். உணவு பொருட்களை ஈக்கள்? பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும். உணவுப் பொருட்களை நியூஸ் பேப்பரில் மடித்து தரக்கூடாது. இதில் ஏதேனும் குறைகள் காணப்பட்டாலோ உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக இருந்தாலோ அத்தகைய உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெகதீஷ் சந்திரபோஸ் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் 60 இனிப்பு பலகாரங்கள் மற்றும் காரவகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.