ஈரோடு, ஜூலை 4: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அண்ணாசிலை எதிர்புறம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், பெருந்துறை எஸ்ஐ பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அங்கு அதிரடியாக சென்று சோதனை செய்தனர். இதில், வீட்டில் பண்டல் பண்டலாக குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெருந்துறை குன்னத்தூர் சாலையில் ராம ஸ்டோர் நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (21), அவரது தந்தை லட்சுமணராம் (53) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 22.98 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், பவானிசாகர் போலீஸ் எஸ்ஐ ஜான் கென்னடி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பார்க் சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். இதில், அவர் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையை சேர்ந்த சிவராஜ் (59) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 17.24 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.