கரூர், ஜூலை 7: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவஹர் பஜார் அருகே பண்டரிநாதன் கோயில் உள்ளது. இந்த கோயியில் ஆஷாட ஏகாதசி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அன்று ஒரு நாள் மட்டும் கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.அதனடிப்படையில், ஆஷாட ஏகாதசி விழாவை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் (5ம் தேதி) துக்காரம் கொடி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று காலை 6 மணி முதல் 7 மணி வரை சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து, காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் சுவாமியின் பாதங்களை தொட்டு வணங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கரூர் மாநகராட்சி பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (7ம் தேதி) காலை 6 மணியளவில் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.