சென்னை, ஜூன் 16: தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பாண்டிபஜார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு பகுதியை சேர்ந்த தங்கும் விடுதி மேலாளர் தமிழ்அரசன் (23) தலைமையில், தாம்பரம் பகுதியை சேர்ந்த ராஜா (53),
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த கீர்த்திராஜ் (29), அஜய்காந்த் (31), புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சேகர் (37), ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் (55), மேற்கு தாம்பரத்தை சேர்ந்த சண்முகம் (47), மாடம்பாக்கத்தை சேர்ந்த ராஜன் (56), வேளச்சேரியை சேர்ந்த கோகுல் (38) ஆகிய 9 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அதைதொடர்ந்து விடுதி மேலாளர் தமிழ் அரசன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.56,400 பணம், 8 சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.