நாமக்கல், அக்.26: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை நெடுங்காபுலிப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைசாமி. இவரது மகன் விஜயகாந்த் (28). இவர் செல்லப்பம்பட்டி கிராமத்தில் மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 19ம் தேதி வேலை முடிந்து, சம்பள பணத்தை வாங்கி கொண்டு நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளார். அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தபோது, அவரை வழிமறித்த 4 பேர் கும்பல் அவர் அணிந்து இருந்த 1 பவுன் தங்க செயின், செல்போன் மற்றும் ₹4,500யை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து, விஜயகாந்த் நாமக்கல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேர் கும்பலை தேடி வந்தார்கள். போலீசார் நடத்திய விசாரணையில், வழிப்பறி சம்பவத்தில் நாமக்கல்லை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு தொடர்பிருப்பது தெரிந்தது. அதைத்தொடர்ந்து, அந்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.