வேடசந்தூர்: திருச்சி மாவட்டம், கல்பட்டி அருகே உள்ள புதுவாடிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகபாண்டி (52), கட்டிடத் தொழிலாளி. இவரது மகன் கருணாநிதி (20) என்பவரிடம் அய்யலூர் அருகே உள்ள தங்கம்மாபட்டியை சேர்ந்த சண்முகம் (49) என்பவர் கடந்த 3 வருடத்திற்கு முன்பு 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி தங்கம்மாபட்டிக்குச் சென்ற முருகபாண்டி தனது மகனிடம் வாங்கிய பணத்தை தருமாறு சண்முகத்திடம் கேட்டுள்ளார். அப்போது சண்முகம், ‘உன்னிடம் பணம் வாங்கவில்லை, உனது மகனிடம் தான் வாங்கினேன்.
நீ எதற்காக பணத்தை என்னிடம் கேட்கிறாய்’ என்று கேட்டு தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் சண்முகம் மற்றும் அவரது மகன் சடையாண்டி (21) ஆகிய இருவரும் சேர்ந்து கல் மற்றும் கம்பால் முருகபாண்டியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த முருகபாண்டியை அவரது உறவினர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து முருகபாண்டி புகாரில், வடமதுரை போலீசார் சண்முகம், சடையாண்டி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.