வேலூர், ஜூலை 3: ஆன்லைன் மூலம் பணத்தை இழந்தவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் ஆன்லைனில் பகுதி நேர வேலை, முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம், அரசு கல்வி உதவித்தொகை, டிஜிட்டல் கைது, கே.ஒய்.சி புதுப்பித்தல் என்பது உட்பட பல்வேறு பெயர்களில் நூதன முறையில் ஆன்லைன் மூலம் மோசடி நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஆன்லைனில் பணம் இழந்தவர்கள் தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு, வேலூர் எஸ்பி அலுவலகத்தில் உள்ள சைபர் போலீசில் புகார் அளிக்க வருகின்றனர்.
அதன்படி நாள் ஒன்றுக்கு 30 நபர்கள் வரை ரூ.5,000 முதல் அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை இழந்தவர்கள் புகார் அளிக்கின்றனர். அவ்வாறு புகார் அளிக்க வரும் நபர்களிடம் தாங்கள் ஏமாந்ததை போன்று மற்றவர்கள் ஏமாறுவதை தவிர்ப்பதற்காக விழிப்புணர்வு தகவல்களை தங்கள் தொடர்பில் உள்ள 100 நபர்களுக்கு அனுப்புமாறு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘சைபர் கிரைமில் தினந்தோறும் ஏராளமான நபர்கள் ஆன்லைனில் பணத்தை இழந்தது தொடர்பாக புகார் அளிக்க வருகின்றனர். அவர்களிடம் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் அவர்கள் தொடர்பில் உள்ள நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறுந்தகவல்களை அனுப்புமாறு அறிவுறுத்துகிறோம். ஏனெனில் மற்றவர்கள் எதிர்காலத்தில் ஏமாறுவதை தடுப்பதற்காக இத்தகைய புதிய முயற்சியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்’ என்றனர்.