புதுச்சேரி, ஜன. 20: புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் முகமது அக்சர் கான் (52). இவர் சொந்தமாக ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். இவரது மகள் இசாஜ் அகமது ஆன்லைன் மூலமாக பகுதிநேர வேலை தேடிய நிலையில், முன்பின் தெரியாத நபர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது ஆன்லைனிலேயே ஒரு குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்படும் என்றும், அதை குறுகிய காலத்தில் செய்து முடித்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார்.அதன்படி மேற்படி நபர் கூறியபடி டெலிகிராம் அக்கவுண்ட் ஓப்பன் செய்து அதன் மூலமாக முதலில் சிறிய தொகையை செலுத்திய இசாஜ் அகமதுக்கு அதிக லாபம் கிடைக்கவே கடந்த 2023 ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் அடுத்தடுத்து பல்வேறு தவணையாக பணத்தை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இவ்வாறாக மொத்தம் ரூ.4 லட்சத்து 9 ஆயிரத்து 420 ஐ அவர் முதலீடு செய்துள்ளார்.
அப்போது டெலிகிராம் அக்கவுண்ட் திடீரென ரத்தானது.அதைத் தொடர்ந்து மேற்படி நபரை தொடர்பு கொண்டு தான் முதலீடு செய்த ரூ.4.09 லட்சத்தை திரும்ப தருமாறு கேட்க முயன்றுள்ளார் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த இசாஜ் அகமது கொடுத்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு வழக்கு: இதேபோல் புதுச்சேரி பெத்துசெட்டிபேட்டில் வசிக்கும் பன்னீர்செல்வம் என்பவரின் மனைவி விஜயகுமாரி (29), ஆன்லைனில் வேலை இருப்பதாக இவரது டெலிகிராமில் மெசேஜ் வந்தது.
முகம் தெரியாத பெண், அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு அறைகளுக்கு முன்பதிவு செய்து கொடுப்பதன் மூலம் சம்பாதிக்கலாம். அப்போது இதற்காக ஒரு இணைய சேவையை உருவாக்கி, அவருக்கான பணியை ஒதுக்கி கொடுத்துள்ளார். அவரின் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து பணியை தொடங்கியுள்ளார். இதில் அதிக முதலீடு செய்தால், நிறைய சம்பதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி 7 தவணைகளாக ரூ. 2.34 லட்சம் முதலீடு செய்து பணியை தொடர்ந்துள்ளார். அதன்பிறகு சம்பாதித்த பணத்தை எடுக்க முடியவில்லை. இந்த நூதன மோசடி குறித்து விஜயகுமாரி அளித்த புகாரின் பேரிலும் சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகிறது.