எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், தீர்வு காண வேண்டுமென்றால் அதற்கான ஒரே வழி நம்பிக்கையான இறைவழிபாடு தான். அந்த இறைவனை தூய்மையான மனதோடு வழிபடுவதன் மூலம், நமக்கு கிடைக்கப்படும் பலனை எவராலும் தடுக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு இருக்கும் பணக்கஷ்டத்தோடு சேர்த்து, மன கஷ்டத்தையும் தீர்த்துக்கொள்ள ஒரு சுலபமான முருக வழிபாட்டை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வறுமையின் பிடியில் உள்ளவர்கள் கஷ்டத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும், செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகவும், மன சஞ்சலத்தோடு இருப்பவர்கள், நிறைவான வாழ்க்கையை அடையவும் முருகனை இந்த முறையில் வழிபடுவது மிகவும் சிறந்தது. இன்று வெள்ளி விளக்கு, பித்தளை விளக்கு, வெங்கல விளக்கு இப்படி பலவகைப்பட்ட விளக்குகள் வந்திருந்தாலும், இறைவனுக்குரிய விளக்கு என்று நம் முன்னோர்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்தது மண் விளக்குகள் தான். இதற்காக வீட்டில் வெள்ளி விளக்குகளை பயன்படுத்தக்கூடாது என்று கூறவில்லை. எப்படிப்பட்ட ஆடம்பரமான விளக்குகளை நம் வீட்டில் வைத்திருந்தாலும், பூஜை அறையில் ஒரு மண்ணினால் ஆன அகல் தீபம் ஏற்றி வைத்து இறைவனை வழிபடுவது மிகவும் சிறந்த ஒன்று. கஷ்டங்களை போக்கும் முருகப்பெருமானின் வழிபாட்டினை வீட்டில் முதன்முதலாக தொடங்க வேண்டுமென்றால் புதிய அகல் விளக்கு ஒன்று(வாரம் தோறும் இதே விலக்கை பயன்படுத்திக் கொள்ளலாம்), 2விளக்கு திரி, சுத்தமான பசுநெய், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் படம் ஒன்று. உங்கள் வீட்டில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் படம் இல்லை என்றால் புதியதாக வாங்கிக் கொள்ளவும். வீட்டின் மகிழ்ச்சிக்கு தனி முருகரை விட துணைவியுடன் இருக்கும் முருகப்பெருமானின் படம் மிகவும் சிறந்தது. இந்த வழிபாட்டினை செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு அல்லது மாலை 6 மணிக்கு செய்ய வேண்டும். புதியதாக வாங்கிய அகல் விளக்கை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து விட்டு, மஞ்சள் குங்குமம் இட்டு, இரண்டு விளக்கு திரிகளை ஒன்றாக திரித்து (ஒரு திரி போட்டு விளக்கு ஏற்றக்கூடாது), நெய் தீபம் ஏற்றி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானின் படத்திற்கு முன்பு கிழக்கு பக்கம் பார்த்தவாறு வைத்துக்கொள்ள வேண்டும். முருகருக்கு அரளிப்பூ அல்லது முல்லை பூ வாங்கி சூட்டுவது மிகவும் சிறந்தது. நெய் தீபம் ஏற்றிய பின்பு முருகப்பெருமானின் முன்பு அமர்ந்து மனதார பதினோரு முறை ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை முதலில் உச்சரிக்க வேண்டும். அதன்பின்பு முருகப்பெருமானுக்குரிய இந்த மந்திரத்தை 11 முறை உச்சரிப்பது மிகவும் சிறந்தது. சிவயோஸ்தனுஜாயாஸ்து ச்ரித மந்தாரசாகினே சிகிவர்யதுரங்காய ஸுப்ரமண்யாய மங்களம் பக்தாபீஷ்ட ப்ரதாயாஸ்து பவரோக விநாசினே ராஜராஜாதி வந்த்யாய ரணதீராய மங்களம் சுப்ரமண்ய மங்களாஷ்டகம் எம்பெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் மகனாக இருப்பவரே, தன்னை நாடி வந்தவர்களுக்கு கேட்ட வரத்தை கொடுக்கும் கண்கண்ட தெய்வமே, அழகான தோகைகளை கொண்ட மயிலை, வாகனமாக பெற்றிருக்கும் முருகப் பெருமானுக்கு வணக்கம். குபேரரால் வழங்கப்பட்டவரே, பக்தர்களின் நிலையை புரிந்துகொண்டு துயரங்களை நீக்குபவரே, ஜனன மரண பயத்தைப் போக்குபவரே, மனதார உன்னை வணங்குகின்றோம். என்பதுதான் இதன் பொருள். இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமை தோறும் எவரொருவர் மனதார உச்சரித்து, நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றாரோ, அவருக்கு நிச்சயம் மன நிம்மதியான வாழ்க்கையும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் விடிவு காலமும் பிறக்கும்….