அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர், பட்லூர் பூசாரியூரில் செம்முனிஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்தேர் திருவிழா குட்டிக்குடி திருவிழாவாக நடக்கும். அதன்படி கடந்த 14ஆம் தேதி பூச்சாட்டுகளுடன் விழா துவங்கியது. இதனை அடுத்து ஆயக்கால் போடுதல், தீர்த்தக்குடம் எடுத்து வருதல் உள்ளிட்டவைகளை அடுத்து முதல் வன பூஜை எனும் சித்திரை பெருந்தேர் திருவிழா நடந்தது. இதில் நேற்று காலை பூசாரி ஊரிலிருந்து பல்லக்கில் பச்சாயியும், செம்முனிச்சாமி, மன்னாதீஸ்வரர் ஆகிய சாமிகள், அலங்கரிக்கப்பட்ட சப்பாரத் தேரில் பக்தர்கள் செம்முனிச்சாமி கோயிலுக்கு தோளில் சுமந்து வந்தனர்.
இங்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். இதன் பின்பு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக பிறந்த ஒரு வார ஆட்டுக்குட்டியிலிருந்து மூன்று வருடமான ஆட்டுக்கிடாய்கள் வரை பலி கொடுக்கும் குட்டிக்குடி திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக கொடுக்கும் ஆட்டுக்குட்டி வெட்டி பூசாரிகள் ரத்தம் குடித்து ஆடினர். இதனைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டு இருந்தனர்.
இதில் கோபி, அந்தியூர், வெள்ளித்திருப்பூர், மாத்தூர் பட்லூர், அம்மாபேட்டை பவானி, ஈரோடு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் வளாகத்தில் அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இத்திருவிழா பாதுகாப்பு பணியில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அம்மாபேட்டை, அந்தியூர், பவானி பகுதிகளிலிருந்து கோயில் திருவிழா சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.