ஆரணி, அக்.28: ஆரணி அருகே பட்டு ரகங்களை விசைத்தறியில் நெய்வதை அதிகாரிகளிடம் தெரிவித்த நெசவாளியை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு(48), கைத்தறி நெசவு தொழிலாளி. இவர் கடந்த 19ம் தேதி ஆரணி அடுத்த வந்தவாசி செல்லும் சாலையில் உள்ள சிவசக்தி நகர் பகுதியில் பட்டு ரகங்களை விசைத்தறியில் பயன்படுத்தி பட்டு சேலை உற்பத்தி செய்வதாக கைத்தறி உதவி இயக்குனருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, கைத்தறி உதவி இயக்குனர் பட்டு ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யும் இடத்தினை ஆய்வு செய்ய பாபுவுடன் சிவசக்தி நகர் பகுதிக்கு சென்றனர். அப்போது, அதேபகுதியை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் நகராஜ் அவரது மகன் சுரேஷ் இருவரும் சேர்ந்து பாபுவை சரமாரியாக தாக்கினார்களாம். இதனால் பாபுவும் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆரணி தாலுகா போலீசில் நேற்று முன்தினம் பாபு கொடுத்த புகாரின் பேரில் நகராஜ், அவரது மகன் சுரேஷ் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல், நாகராஜ் தாலுகா போலீசில் கொடுத்த மற்றொரு புகாரின்பேரில் பாபு மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.