பட்டுக்கோட்டை, மார்ச்10: மகளிர் விடியல் பயணமாக பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினத்திற்கு புதிய பேருந்து சேவையை எம்.பி, எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தனர், மகளிர் விடியல் பயணமாக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்கு புதிய பேருந்து இயக்க தொடக்க விழா நிகழ்ச்சி பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினத்திற்கு இயக்கப்படும் வழித்தடத்திற்கு புதிய பேருந்து தொடக்க விழா நடந்தது.
பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்தை தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி, பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரை ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து எம்.பி, எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பேருந்தில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தனர். மேலும், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுடன் சேர்ந்து ஒரு ஹோட்டலில் தேநீர் அருந்தினர்.
நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பழனிவேல், பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், நகர திமுக செயலாளர் செந்தில்குமார், தொமுசபொதுச்செயலாளர் பாண்டியன், தமிழ்நாடு போக்குவரத்து கழக துணை மேலாளர் (தொழில்நுட்பம்) ராஜேஷ், பட்டுக்கோட்டை கிளை மேலாளர் முருகானந்தம் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.