பட்டிவீரன்பட்டி, நவ. 1: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி துணைத் தலைவர் கல்பனாதேவி அருண்குமார் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் உமாசுந்தரி முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் 9வது வார்டு அண்ணாநகர் வளர்பிறை தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சாக்கடை அமைக்க இடம் வழங்கிய மதனகுரு என்பவருக்கு நன்றி தெரிவித்தல்,
அம்பேத்கார் நகர் மேற்கு தெருவில் ரூ.30.63 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் வசதியுடன் பேவர்பிளாக் சாலை அமைத்தல், கிழக்குத் தெருவில் ரூ.11 லட்சம் செலவில் பேவர்பிளாக் சாலை அமைத்தல், நமக்கு நாமே திட்டத்தில் காமராஜர் மண்டபம் முதல் பேரூராட்சி அலுவலகம் எதிர்பகுதி வரை பேவர்பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.