நிலக்கோட்டை, மே 28: திண்டுக்கல்ம் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்ப்பாயம்) நடந்து வருகிறது. நேற்று ஒருத்தட்டு வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைபெற்றது. அப்போது அம்மையநாயக்கனூரில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே நக்கம்பட்டி சாலையோரத்தில் குடியிருந்து வரும் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தாசில்தார் விஜயலெட்சுமி அவர்களை அழைத்து பேசியதையடுத்து, அவர்கள் தங்களது கோரிக்கையினை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சக்திவேலிடம் மனுவாக வழங்கினர்.
பின்னர் அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: நாங்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம், கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், கலெக்டர் வரை பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். மேலும் ஆண்டுதோறும் நடக்கும் ஜமாபந்தியிலும் மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை பட்டா வழங்க எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இந்த ஆண்டாவது வருவாய் துறையினர் உரிய ஆய்வு செய்து எங்களது குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.