கே.வி.குப்பம், ஏப்.5: கே.வி.குப்பம் அருகே பட்டா முறைகேட்டில் ஈடுபட்ட விஏஓவை சஸ்பெண்ட் செய்து சப்-கலெக்டர் உத்தரவிட்டார். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த செண்ணங்குப்பம், பி.கே.புரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கான விஏஓவாக பணிபுரிந்து வந்தவர் சங்கர்(48). இவர் அரசுக்கு சொந்தமான கிராமப்புற பாதை புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களை பட்டா செய்வது, உரிய ஆவணமின்றி விரும்பும் பெயரில் மாற்றி தருவது, பதிவேடுகளில் முறைகேடாக மாற்றம் செய்வது என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, வருவாய்த்துறை அதிகாரிகள் சமரசம் செய்து முறைகேடுகள் குறித்து மனு அளிக்கும்படி கூறினர். இதனை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், சப்-கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் கீதா ஆகியோரிடம் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி சப்-கலெக்டர் வெங்கட்ராமனுக்கு உத்தரவிட்டார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை முடிவில், சப்-கலெக்டர் வெங்கட்ராமன் விஏஓ சங்கரை சஸ்பெண்ட் செய்து சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக டிஆர்ஓ ராமமூர்த்தி விசாரணை செய்ய உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.