உத்திரமேரூர், ஆக.17: உத்திரமேரூர் அருகே பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் தலையாரி ஆகியேரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். உத்திரமேரூர் அடுத்த பினாயூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி குமார் (55). இவர், தன்னுடைய 57 சென்ட் இடத்திற்கு பட்டா மாற்றவும், உட்பிரிவு செய்யவும் கடந்த ஜூலை மாதம் விண்ணப்பித்திருந்தார். அரும்புலியூர் கிராமத்தில் விஏஓவாக பதவி வகிக்கும் மாரியம்மன் (50). தற்போது, பினாயூர் விஏஓவாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், விஏஓ மாரியப்பன் விவசாயி குமாரிடம் பட்டா மாற்றம் செய்து தர ₹5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி குமார். காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அரும்புலியூர் விஏஓ அலுவலகத்தில் மறைந்திருந்தனர். இந்நிலையில், தலையாரி கவியரசன் (45). விவசாயி குமாரிடம் ரசாயணம் தடவிய ₹5 ஆயிரத்தை லஞ்சமாக வாங்கியபோது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கையும், களவுமாக பிடிப்பட்டார். இதையடுத்து விஏஓ மற்றும் தலையாரி ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறைனர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.