கள்ளக்குறிச்சி, மார்ச் 27: கள்ளக்குறிச்சி அடுத்த கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (40). விவசாயி. இவரது குடும்பத்தில் பாகப்பிரிவினை செய்ததாகவும், கூட்டுப்பட்டாவை பிரித்து பட்டா பெயர் மாற்றம் செய்திட வேண்டி வெங்கடேசன் அதே கிராமத்தில் உள்ள விஏஓ பெரியாபிள்ளையிடம் முறையிட்டுள்ளார். அப்போது பட்டா பெயர் மாற்றம் செய்ய விஏஓ, ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து விவசாயி வெங்கடேசன், கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீசாரிடம் முறையிட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியது போன்று விஏஓவிடம் பணம் கொடுக்க கடந்த வாரம் வெங்கடேசன் முயன்ற போது, அச்சத்தில் பணத்தை வாங்கவில்லை. பின்னர் கடந்த 24ம் தேதி விஏஓ, வெங்கடேசனை தொடர்பு கொண்டு மீண்டும் பணம் கேட்டுள்ளார். அன்று ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்துடன் வெங்கடேசன் விஏஓவை தொடர்பு கொண்ட போது கச்சிராயபாளையம் வர சொல்லி உள்ளார். பொன்னுசாமி என்பவரை அனுப்பி வைக்கிறேன் பணத்தை கொடுக்கவும் என விஏஓ தெரிவித்துள்ளார். அதன்படி அங்கு வந்த பொன்னுசாமியிடம், பணத்தை கொடுத்தபோது மறைந்து இருந்த கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி சத்தியராஜ் மற்றும் போலீசார், மடக்கிப்பிடித்தனர். அதில் விஏஓ பெரியாபிள்ளைக்கு பணம் வாங்கி கொடுக்கும் புரோக்கராக அவர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனை அறிந்த விஏஓ பெரியாபிள்ளை தப்பியோடி விட்டார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீசார், விஏஓ மாரியாபிள்ளை மற்றும் புரோக்கர் பொன்னுசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து பொன்னுசாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பொன்னுசாமியை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்….
பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புரோக்கர் கைது
previous post