விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடி விபத்தில் அறை இடிந்து தரைமட்டமானது. அதிகாலை நேரம் என்பதால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை விருதுநகர் அருகே வி.ராமலிங்கபுரத்தில் உள்ளது. இங்கு சங்கு சக்கரம், புஸ்வானம் போன்ற வெடிகள் தயாரிக்கப்படுகின்றன. கன்னிசேரி, சங்கரலிங்கபுரம், ஓ.கோவில்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் வேலைபார்த்து வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இன்று அதிகாலை 5.30 மணியளவில் பட்டாசு இருப்பு வைக்கப்பட்டுள்ள அறையில் உராய்வு காரமணாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அறை இடிந்து தரைமட்டமானது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வழக்கமாக காலை 6 மணிக்கு பிறகே தொழிலாளர்கள் வேலைக்கு வருவார்கள். அதிகாலையில் வெடிவிபத்து ஏற்பட்டதால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….