திருவண்ணாமலை ஜூலை 1: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் ரம்யா சுகந்தி(44). எம்பிஏ பட்டதாரி. இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த ஜெகன்நாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக கணவன் – மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேரன் நகர் பகுதியில் வாடகை வீடு எடுத்து ரம்யா சுகந்தி கடந்த ஆறு மாதங்களாக தனியாக வசித்து வந்தார். ஐடி நிறுவனத்தில் வீட்டிலிருந்துபடியே பணிபுரிவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் தங்கி இருந்த வீட்டிலிருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. வீடும் உள் பக்கம் பூட்டி இருந்தது. அதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர், திருவண்ணாமலை தாலுகா போலீசுக்கு தகவல் அளித்தனர். அதை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் போலீசார் விரைந்துச் சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய நிலையில் ரம்யா சுகந்தி இறந்து கிடந்தது தெரியவந்தது. இறந்து நான்கு நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிகிறது. அதைத் தொடர்ந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, ரம்யா சுகந்தியின் உறவினரான சென்னையில் வசிக்கும் ஜெயபிரகாஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.