கிருஷ்ணகிரி, செப்.2: கிருஷ்ணகிரி அக்ரஹாரம் முல்லை நகரைச் சேர்ந்தவர் முருகன் மகள் பொன்மதி(எ) ஷாலினி(20). பி.காம் பட்டதாரியான இவர், கடந்த 30ம் தேதி வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில், அவரது பெற்றோர் புகாரளித்தனர். அதில், தங்கள் மகளை காவேரிப்பட்டணம் அருகே கரகூர் கிராமத்தைச் சேர்ந்த வினித் என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உத்தனப்பள்ளி அருகே கொடகரபள்ளியைச் சேர்ந்த ராஜப்பா மகள் ஆர்த்தி(23). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 29ம் தேதி, அந்தேவனப்பள்ளி அருகே தோழியின் திருமணத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர், உத்தனப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். அதில், டி.தம்மாண்டரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த திவாகர் என்பவர், தங்களது மகளை கடத்திச்சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.