கரூர், ஜூன் 6: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரிகள், ஐடிஐ தொழிற்கல்வி முடித்தவர்கள் தொழில்முனைவோர் புத்தாக்க சான்றிதழ் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (இடிஐஐ-டிஎன்) அகமதாபாத் உடன் இணைந்து கடந்தாண்டு முதல் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பினை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இநத கல்வி பயின்று வருகின்றனர். பாடத்திட்டம் மேம்பாடு மற்றும் நிபுணர்களின் பயிற்சி மூலம் தொழில் முனைவோரை வளர்ப்பதில் அகமதாபாத் நிறுவனம், பரந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறது.
இந்தாண்டும் சான்றிதழ் படிப்பு ஜூன் 2025 முதல் தொடங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் (ஆன்லைன் முறையில்) வரவேற்கப்படுகிறது. தொழில் முனைவோராக ஆர்வமுள்ள இளைஞர்கள் < https://www.editn.in/Wep-One-Year-Registration > இந்த இணையதளம் மூலம் படிப்பில் சேர்ந்து பயனடைய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ. 80 ஆயிரம் கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது. 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் மற்றும் ஐடிஐல் தொழிற்கல்வி பயிற்சி முடித்தவர்கள் சேர தகுதியானவர்கள். இது தொழில் முனைவோர் குறித்த கல்வித்திட்டமாகும். எனவே, தொழில் முனைவோராக முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும் புதுப்பித்த பாடத்திட்டம், நவீன வசதிகளுடன் கூடிய நூலகங்கள், அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், கள அனுபவம், பொது போக்குவரத்தை அணுகக்கூடியது.
குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், வணிக வளர் காப்பகங்கள் ஆகியவை இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முழுதும் உள்ள 9 வளர் காப்பகங்களுக்கு இலவச அணுகல் கிடைக்கும். மாணவர்கள் பல்வேறு மாநில அரசு நிறுவனங்களுக்கும் சென்று, தொழில் முனைவோருக்குத் தேவையான அத்தியாவசிய வணிகத்திறன்கள் மற்றும் அறிவை வளர்த்துக் கொள்ளலாம். தயாரிப்பு யோசனையில் இருந்து தயாரிப்பு வணிகமயமாக்கலுக்கு அழைத்துச் செல்வதற்கான ஐவிபி வவுச்சர் ஏ மற்றும் பி திட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவி செய்யப்படும். மாணவர்கள் டான்ஸ்சீட் நிதிக்கு விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்படும். மேலும், மாணவர்கள் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க திறன்கள் வளர்த்துக் கொள்ளலாம்.
தொழில் முனைவோர் குறித்த அறிவைப் புதுப்பிக்கும் பொருட்டு, இடிஐஐ அகமதாபாத் நிறுவனம், அண்ணா பல்லைக் கழகம், கிரசன்ட் இன்னோவேஷன் இன்கியுப்டேஷன் கவுன்சில், போர்ஜ் இன்கியுப்டேஷன் சென்டர், கோல்டன் ஜூப்ளி பயோ டெக் பார்க் பார் உமன் சொசைட்டி போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கான மாணவர்களின் வணிக அனுபவ பயணங்கள் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு www.editn.in ஐ பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும், 8668101638 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.