திருவண்ணாமலை, ஜூலை 21: திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆடி மாத திருவிழாக்களை முன்னிட்டு, படவேடு, செங்கம் மற்றும் முனுகப்பட்டு ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற போளூர் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில், செங்கம் புதூர் மாரியம்மன் கோயில், செய்யாறு அடுத்த முனுகப்பட்டு பச்சையம்மன் கோயில்களில் ஆடி மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். எனவே, பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, முக்கிய நகரங்களில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பி்ல் இன்று முதல் வரும் செப்டம்பர் 1ம் தேதி வரை குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, படவேடு அம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், செங்கம் புதூர் மாரியம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், முனுகப்பட்டு பச்சையம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதேபோல், வார இறுதி நாட்களில் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 20 சிறப்பு பஸ்களும், போளூரில் இருந்து சென்னைக்கு 5 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.