ராஜபாளையம், ஆக.25: ராஜபாளையம் பஞ்சாலைகளில் ஆய்வு செய்வதற்காக கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைமையிலான குழுவினர் வருகை தந்துள்ளனர். ராஜபாளையம் பகுதியில் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைமையிலான குழு வருகை தந்துள்ளது.
இந்த குழுவில் தொழிற்சங்க தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆறுமுகம், ஏஐ டியுசி ரவி, விஜயன், ஹெச்எம்எஸ் ராஜாமணி, கண்ணன், மூக்கையா, எல்பிஎப் நெடுஞ்செழியன், ஐஎன்டியுசி பாலசுந்தரம், சிஐடியு கணேசன், எம்எல்எப் காதர் மைதீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் விவிங் மற்றும் சைசிங் என்ற நிறுவனத்திற்கும் ராஜபாளையம் விஷ்ணு சங்கர் மில்ஸ் லிமிடெட் ஓ.இ ஸ்பின்னிங் என்ற நிறுவனத்திற்கும், கீதா கிருஷ்ணா மில்ஸ், சுப்புராஜ் காட்டன் மில்ஸ் நிறுவனத்திற்கும் நேரில் சென்று வேலை அளிப்போர் மற்றும் பணிபுரியும் தொழிலாளர்களிடம் விபரம் பெற்று ஆய்வு செய்தனர்.