தர்மபுரி, ஆக.22: தர்மபுரி கலெக்டர் கார் முன் அமர்ந்து, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காரிமங்கலம் ஒன்றியம், இண்டமங்கலம் ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் ஜோதிலட்சுமி, 5வது வார்டு உறுப்பினர் தங்கமணி ஆகியோர், நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது, திடீரென கலெக்டர் கார் முன் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து விசாரித்தனர். அப்போது, இருவரும் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை போலீசாரிடம் வழங்கினர். அவர்கள் அதிகாரிகளிடம் அதனை ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தர்ணாவில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், ‘கடந்த ஓராண்டு காலமாக, இண்டமங்கலம் ஊராட்சியில் சரிவர மாதாந்திர கூட்டம் நடத்தப்படுவதில்லை. ஊராட்சி எழுத்தர் சரவணன், உறுப்பினர்களின் கையொப்பத்தை போலியாக போட்டு, கூட்டத்தை நடத்தியதாக கணக்கு காட்டி வருகிறார். ஊராட்சி பதிவேடுகளில் உள்ள கையொப்பங்கள், தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்களுடையது தானா என்பதை ஆய்வு செய்ய வேண்டுமென, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்தோம். ஆனால், ஊராட்சி எழுத்தர் மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கலெக்டரின் கார் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டோம்,’ என்றனர். புகாருக்குள்ளான ஊராட்சி மன்ற எழுத்தர் மீது, பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இவர் ஏற்கனவே பணியாற்றிய இடங்களில், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில், முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.