பள்ளிகொண்டா, ஜூலை 26: பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில், பஞ்சராகி நின்ற கன்டெய்னர் லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் வழக்கத்தைவிட அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு செல்லும் நேரம் என்பதால், அந்த நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. மேலும், சாவடி மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சரிசெய்ய போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை ஆந்திர மாநிலத்தில் இருந்து மும்பைக்கு கிரானைட் கற்களை ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி, குடியாத்தம் சாலையில் திடீரென பஞ்சராகி நடுரோட்டிலேயே நின்றது. இதையடுத்து, லாரியின் டயரை மாற்றும் பணியில் டிரைவர், கிளீனர் ஈடுபட்டனர். ஆனால், லாரியில் எடை அதிகமாக இருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையில், அவ்வழியாக வந்த வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி செல்ல முயன்றபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. மேலும், ஆம்புலன்ஸ் வாகனமும் நெரிசலில் சிக்கியது. லாரியின் பழுதை சரிசெய்ய சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலானதால் பள்ளி வாகனங்களும், பஸ்களும் நெரிசலில் சிக்கியதால் மாணவர்கள், அலுவலகத்திற்கு செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். மேலும், லாரி பழுதாகி நின்ற இடத்திலேயே தனியார் மருத்துவமனைகளும், கூட்டுறவு வங்கியில் சேமிப்புக்கணக்கு தொடங்க பெண்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.