சிவகங்கை, நவ.8: சிவகங்கை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பங்குத் தொகையை உடனடியாக வழங்க கோரி, அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கவுரவத் தலைவர் குமார் தலைமை வகித்தார். கிளைச்செயலர் அசோகன், பொருளாளர் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சங்க மாவட்டச்செயலர் முருகன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இதில் சங்க உறுப்பினர்களாக இருந்த பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் செலுத்திய பங்குத் தொகையை உடனடியாக திருப்பி வழங்க வேண்டும். மோசமான நிர்வாகத்தால் சங்கத்தை வலுவிழக்கச் செய்த இயக்குனர் குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையிலுள்ள சங்க சொத்துகளை அரசுடைமை ஆக்க வேண்டும்.
சங்க கணக்குகளை முழுமையாக தணிக்கை செய்து வெள்ளை அறிக்கை அறிக்கை வெளியிட வேண்டும். சங்க நிதியை நன்கொடை என்ற பெயரில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்ட்ரல் வங்கி சிபிஐயிடம் கொடுத்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.