குளித்தலை, ஜூன் 3: பங்களாபுதூர் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு தலைமையாசிரியர் தலைமையில் மாலை அணிவித்து, நோட்டு புத்தகங்கள் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் கோடைவிடுமுறைக்குப் பின் நேற்று (ஜூன் 2) திறக்கப்பட்டது. அதன்படி, கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த பங்களாபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முன்கூட்டியே பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு குடிநீர் தொட்டி, கழிப்பிட கூடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை தூய்மைப்படுத்தி தயார் படுத்தப்பட்டது. நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் துவங்கியது. இப்பள்ளியில் புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களை வரவேற்கும் வகையில் அவர்களுக்கு மாலை அணிவித்து பரிசு பொருள் மற்றும் இலவச பாட புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி பெற்றோர்களையும் வரவேற்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சித்ராதேவி தலைமையில் ஆசிரியர்கள் முதலாம் வகுப்பு மாணவர்களை இன்முகத்தோடு வரவேற்றனர். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவி பிரவீனா, பள்ளி ஆசிரியர்கள் மாதுரிதேவி, மோகன், விஜயலட்சுமி, நளினி, அம்பிகா, சண்முகவள்ளி, தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குளித்தலை வட்டார செயலாளர் மணிகண்டன் மற்றும் பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முதல் நாள் என்பதால் பள்ளியில் சேர்ந்த சிறுவர்கள் ஆர்வத்துடன் வரவேற்பை ஏற்று வகுப்பறைக்கு சென்றனர். கிராமப்புறங்களில் தமிழக அரசு கல்வித்துறைக்கு அளித்திருக்கும் காலை உணவு திட்டம், விலையில்லா சீருடை, விலையில்லா பாடப்புத்தகங்கள், மதிய உணவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளதால் எங்கள் குழந்தைகளை இப்பகுதி பெற்றோர்களாகிய நாங்கள் அரசு பள்ளியில் சேர்க்க முன் வந்திருக்கிறோம் என பெற்றோர்கள் கூறினர்.