ரிஷிவந்தியம், ஜூன் 4: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் ஆட்டு சந்தை நடைபெற்று வருகிறது. வெளி மாநில, மாவட்ட மற்றும் ரிஷிவந்தியம் மற்றும் வாணாபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆடுகளை இந்த சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் அதிகளவில் சந்தைக்கு வந்திருந்தனர். ஒரு ஆடு சராசரியாக ரூ.8 ஆயிரம் வரை விலை போனது. நேற்று ஒரே நாளில் சுமார் 2,500 ஆடுகள் ரூ.2.30 கோடி அளவுக்கு விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.2.30 கோடிக்கு ஆடுகள் விற்பனை
0