கடையம், ஆக.11: ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்த முத்துக்குட்டியின் மனைவி பூபதி (74). தனது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்துவரும் இவர், தனது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குமாறு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மனு அளித்திருந்தார். மனுவை பரிசீலித்த மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு வழங்குவதற்காக அப்பகுதிக்கு சென்றனர். ஆனால், மின் இணைப்பு கொடுக்கக் கூடாது என பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிலர் மிரட்டியதாகவும், இதனால் மின் இணைப்பு வழங்கப்படாமல் காலதாமதம் ஆனதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் அங்குசென்ற மின்வாரிய ஊழியர்கள், மின் கம்பத்தில் ஏறி பூபதி வீட்டிற்கு மின் இணைப்பு கொடுத்தனர். அப்போது செல்போனில் தனது உறவினர்களிடம் உரையாடியபடி கையில் அரிவாளுடன் வந்த கல்பனா (55) என்ற மூதாட்டி தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மின்வாரிய ஊழியர் மீது அரிவாளை எரிந்து அச்சுறுத்திவிட்டு அங்கிருந்து தனது வீட்டை நோக்கி மெதுவாக ஓடினார். இதுதொடர்பான படக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இசம்சம்பவத்தின்போது உயிர்தப்பிய மின்வாரிய ஊழியரான கணேசன் என்பவர் இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்தார். இதையடுத்து உதவி பொறியாளர் ஜீவானந்தம் அளித்த புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார், மூதாட்டி கல்பனா மீது அவதூறாக பேசுதல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.