புதுச்சேரி, ஜூன் 28: பகுதி நேர வேலைவாய்ப்பு மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி புதுச்சேரி தனியார் வங்கி மேலாளரிடம் ரூ.11.27 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (29). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவரை கடந்த 5ம் தேதி மர்ம நபர் ஒருவர் டெலிகிராம் மூலம் தொடர்புகொண்டு பகுதி நேர வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை உண்மையான நம்பிய ஸ்ரீராம் மர்ம நபரிடம் வேலை குறித்து கேட்டுள்ளார். அப்போது, ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்தால், அதன்மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என மர்ம நபர் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
தொடர்ந்து, மர்ம நபர் டெலிகிராமில் லிங்கை அனுப்பி ஸ்ரீராம் பெயரில் ஒரு ஐடி தொடங்கியுள்ளார். அதில் ரீசார்ஜ் மற்றும் வித்ராவ் என டாஷ்போர்டில் இருந்துள்ளது. இதையடுத்து மர்ம நபர் முதற்கட்டமாக ரூ.8,500 செலுத்த வேணடும் என ஸ்ரீராமிடம் கூறியுள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின்படி ஸ்ரீராம் ரீசார்ஜ் செய்தபோது, அவரது டாஷ்போர்டில் ரூ.8,500 காண்பித்துள்ளது. தொடர்ந்து அவர்கள் கொடுத்த பணிகளை முடித்துடன் ரூ.12,500 அவரது வங்கி கணக்குக்கு வந்துள்ளது. சிறிய வேலை மூலம் தமக்கு பணம் வந்து இருப்பதை நம்பி ஸ்ரீராம் பல்வேறு தவணைகளில் ரூ.11.27 லட்சத்தை முதலீடு செய்துள்ளார்.
அப்போது, அவரது டாஷ்போர்டில் ரூ.17 லட்சம் இருப்பதாக காண்பித்துள்ளது. அந்த பணத்தை ஸ்ரீராமல் எடுக்க முடியவில்லை. இதுகுறித்து மர்ம நபரிடம் ஸ்ரீராம் கேட்டபோது, கூடுதலாக பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீராம் தேசிய சைபர் கிரைம் போர்டல் மூலம் புகார் அளித்தார். அதன்படி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் ஸ்ரீராமின் புகாரை பெற்று, வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.