ஊட்டி, ஆக. 6: ஊட்டியில் நேற்று பகலில் விட்டு விட்டு மழை பெய்ததால் குளிர் காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 13ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை துவங்கியது. அன்று முதல் பலத்த சூறாவளி காற்றுடன் தீவிரம் காட்டியது. இதனால் முக்கிய சாலைகள், குடியிருப்புகளில் மரங்கள் விழுதல், மண்சரிவு உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட்டன. இவை உடனுக்குடன் வெட்டி அகற்றப்பட்டன.
20 நாட்களுக்கும் மேலாக பெய்த மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகள், குடிநீர் ஆதாரமாக உள்ள அணைகள் நிரம்பின. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து மேகமூட்டமான காலநிலை நிலவி வருகிறது.
இந்த சூழலில் ஊட்டியில் நேற்று பகலில் விட்டு விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக, ஊட்டி நகரில் குளிரான காலநிலை நிலவியது. நகரின் நடமாடிய மக்கள் வெம்மை ஆடைகள் அணிந்த படி நடமாடினர்.