விருதுநகர், மே 24: நோயாளிகளுக்கு மன அமைதி ஏற்படுத்த விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் முயற்சியில் அரசு மருத்துவமனையில் புத்தர் சிலை நிறுவப்பட்டது. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் இளைப்பாற முதல் தளத்தில் புல்வெளி, பூச்செடிகள் நிறுவப்பட்டு சிறிய பூங்கா போன்ற அமைப்பு உள்ளது. இங்கு உள் நோயாளிகள் சற்று இளைப்பாறுவர். பலர் தியானம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
நோயாளிகளின் மன அழுத்தம் குறைக்கவும் மன அமைதிக்காகவும் இந்த இடத்தில் புத்தர் சிலை நிறுவ மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதனையடுத்து ஐடிபிஐ வங்கி 50 ஆயிரம் நிதியுதவி வழங்கியது. மேலும் சில தன்னார்வலர்கள் நிதி வழங்க மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் செலவில் கண்கள் மூடி தியான நிலையில் உள்ள புத்தர் சிலை செய்யப்பட்டது.
கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி தலைமையில் புத்தர் சிலை நேற்று நிறுவப்பட்டது. இதில், துணை முதல்வர் அனிதா, மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் முருகேசன், உதவி நிலைய மருத்துவ அலுவலர் முரளிதரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண், துணை கண்காணிப்பாளர் அன்புவேல் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் பலர் பங்கேற்றனர்.