கோவை: கோவை மாவட்டத்தில் நொய்யல் நீராதாரத்தில் 28 குளங்களும், பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் 200க்கும் மேற்பட்ட குளங்களும், ஊராட்சி, ஊரக வளர்ச்சி முகமை கட்டுபாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர் தேக்கம், கசிவு நீர் குட்டைகளும் உள்ளது. குளம், குட்டை சீரமைப்பு பணியின் போது நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
தற்போது குளங்களில் பசுமை தோற்றம் ஏற்படுத்த வனத்துறை உதவியுடன் மரக்கன்று நட்டு வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. நரசாம்பதி, செல்வாம்பதி, கொலராம்பதி உட்பட அனைத்து குளங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பசுமை தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி தோல்வியடைந்துவிட்டது. குளம், குட்டைகளில், நொய்யல் கரைகளில் முட்புதர் அதிகமாக காணப்படுகிறது.
இவற்றை அழித்து முகிழ், வேம்பு, அகில், வாகை, கொன்றை உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்க்க பொதுப்பணித்துறை நிர்வாகம் முன் வரவேண்டும். மழை பெய்து பசுமையான சூழல் இருப்பதால் மரக்கன்றுகள் நட்டால் எளிதாக வளரும். நொய்யல் ஆற்றாங்கரையில் கோவை முதல் ஈரோடு வரை 80 கி.மீ தூரத்திற்கு சுமார் 1 லட்சம் மரக்கன்று நட்டு வளர்க்க முடியும் என சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.