ஊட்டி,அக்.27:ஊட்டி நொண்டிமேடு (சத்துணவு) பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி நிழற்குடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக, நொண்டிமேடு முதல் லவ்டேல் சந்திப்பு வரையில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.மேலும், இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. சாலையின் இரு புறங்களிலும் இந்த கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால், இச்சாலையில் இரு புறங்களிலும் இருந்த பல்வேறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
சில இடங்களில் நிழற்குடைகள் மற்றும் தடுப்புச்சுவர்கள் போன்றவை அகற்றப்பட்டது. ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் நொண்டிேமடு (சத்துணவு) பகுதியில் இருந்த நிழற்குடையும் அகற்றப்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் பஸ்சிற்காக தற்போது சாலையிலேயே காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைக்காலங்களில் ஒதுங்க கூட இடமின்றி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என நொண்டிமேடு பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.