பெங்களூரு: நேஷனல் ஹெரால்ட் வழக்கில் பிப்ரவரி 22ம் தேதி ஆஜராக கூறி கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே. சிவகுமாருக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது. நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை வழக்கில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து, அமலாக்க துறை அலுவலகத்துக்கு நேரில் ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்நிலையில், இதே வழக்கில் வரும் 22ம் தேதி மீண்டும் ஆஜராகும்படி அமலாக்கதுறை சார்பில் அவருக்கு நேற்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், “மே மாதம் தேர்தல் நடைபெற இருப்பதால் எதிர்க்கட்சியினரை மட்டும் குறி வைத்து அமலாக்கத்துறை சம்மன், சிபிஐ நோட்டீஸ் அனுப்புகிறது. என் மகளுக்கும் கூட சிபிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கல்லூரிக்கு அனுப்பிய நோட்டீசில் கல்லூரி கட்டண விவரம் குறித்து என்னிடம் சிபிஐ கேள்வி எழுப்பி உள்ளது. நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினரின் கேள்விகள் அனைத்துக்கும் பதிலளித்து விட்டேன். தற்போது வரும் 22ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பி உள்ளனர். விசாரணைக்கு போவதா அல்லது கட்சியின் யாத்திரையை தொடருவதாக என்று ஆலோசித்து வருகிறேன்,’’ என்று தெரிவித்தார்….