தியாகராஜநகர், மே 19: நெல்லை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சாலை பணிகள் தரம் குறித்து சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையிலான தணிக்கை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பாளை ஆயுதப்படை மைதான சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் நவீன இயந்திரங்கள் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் போது சாலைப்பணிகள் நீளம், அகலம், கனம், தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குப் பின்னர் இப்பணிகள் திருப்தியாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இக்குழுவினர் புதிய சாலைகளை ஆய்வு செய்தனர். ஆய்வு நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை நெல்லை கோட்ட பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) ராஜசேகர், மதுரை கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) கேசவன், உதவி கோட்ட பொறியாளர் வெற்றிவேல் ராஜன் மற்றும் நெடுஞ்சாலை பொறியாளர் உடன் இருந்தனர்.