நெல்லை, ஆக. 30: நெல்லை மாவட்டத்தில் கல்விக்கடன் வழங்க ரூ.221 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் சிறப்பு கல்விக்கடன் முகாம் வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த சிறப்பு கல்வி கடன் முகாமை நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், ரூ. 4 லட்சம் வரை கல்விக்கடன் பெற சிபில் ஸ்கோர் அவசியம் இல்லை. ரூ.7.50 லட்சம் வரை பிணை தேவையில்லை. கல்விக் கடன்களின் கீழ் மாணவிகளுக்கு 0.50 சதவீதம் வட்டி சலுகையும், தவணையை உரிய நேரத்தில் கட்டும்போது 0.50 சதவீதம் கூடுதல் வட்டி சலுகையும் வழங்கப்படுகிறது. கல்விக்கட்டணம், நூலகக் கட்டணம், புத்தகக் கட்டணம் மற்றும் ஆய்வகக் கட்டணம், விடுதித் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட தகுதியான செலவுகள் இருந்தால் அதற்கும் 20 சதவீதம் வரை கூடுதல் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. கல்விக்கடன் பெறும் மாணவர்கள் 9-15 ஆண்டுகள் வரை கல்விக்கடன் திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்கப்படுகிறது.
முகாமில் அனைத்து வங்கிகளின் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையத்தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். பதிவேற்றம் செய்யாத மாணவ, மாணவிகள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பான் கார்டு நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், 10ம் வகுப்பு, பிளஸ்2 மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை கல்லூரி சேர்க்கை கடிதம், கட்டண விபரங்களுக்கான பட்டியலுடன் முகாம் நடைபெறும் இடத்திற்கு பெற்றோருடன் வந்து அங்கேயே இணைய வழியில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நெல்லை வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் இன்று(30ம் ேததி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு 0462-2310306 என்ற தொலைபேசியில் அல்லது 9442620472 என்ற கைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இந்த வங்கிக் கடன் முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.