நெல்லை, ஆக. 5: நெல்லை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி 1.84 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட பதிவு முகாம்கள் மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மொத்தம் 312 இடங்களில் இன்று (ஆக.5) முதல் 16ம் தேதி வரை நடக்கிறது. ஏற்கனவே 01.08.2023 முதல் பொது மக்களுக்கு விண்ணப்பம் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் 528 ரேஷன் கடைகளில் கடந்த 24ம் தேதி முதல் நடந்து வந்த விண்ணப்பம் பெறும் பதிவு முகாம்கள் நேற்று நிறைவு பெற்றது. இதில் 03.08.2023 மாலை வரை 1.84 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட முகாம்களில் தகுதி பெற்ற மகளிர்கள் அனைவரும் தங்களது அசல் ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்கு பாஸ் புத்தகம் ஆகியவற்றுடன் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அந்தந்த முகாமில் கலந்து கொள்ளலாம். கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் அன்று மட்டுமே வருகை தர வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் அன்று வர இயலாதவர்களுக்கு கடைசி இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.